அக்னிபாத்க்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்ட 9 பயிற்சி அகாடமி நிர்வாகிகள் கைது; பாஜக துணை தலைவரும் சிக்கினார்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில்  தொடர்புடைய பாஜக துணை தலைவர் உட்பட 9 பயிற்சி அகாடமி நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்நிலைய வன்முறை சம்பவத்தில் ரயில்கள் எரிக்கப்பட்டன. பல இடங்களில் ஏராளமான பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அனுராதா கூறுகையில், ‘செகந்திராபாத் ரயில்நிலைய சம்பவம் தொடர்பாக 45 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 44 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது வழக்கு பிரிவுகள் 143, 147, 324, 307, 435, 427, 448, 336, 332, 342, 149, ஐபிசி 150, 151, 152, ரயில்வே சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் நாசமாகி உள்ளன. இந்த போராட்டத்தின் பின்னணியில் ராணுவ ஆள்சேர்ப்பு பயிற்சி மைய அகாடமிகள் உள்ளன. பயிற்சி மைய நிர்வாகி சுப்பா ராவ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளோம். முன்னாள் ராணுவ வீரரான இவர், மாநிலம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வன்முறை போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளார்’ என்றார்.

 இதேபோல் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக உத்திரபிரதேச மாநிலம் அலிகரில் நடந்த வன்முறை சம்பவத்தில், சில பயிற்சி மையங்களின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் அலிகாரில் பயிற்சி மையம் நடத்தி வரும் சுதிர் சர்மா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பாஜகவின் அலிகார் பிரிவு துணைத் தலைவராக இருப்பது தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த வன்முறைப் போராட்டத்தில் இளைஞர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுவரை 9 பயிற்சி மைய நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அலிகார் டிஐஜி தீபக் குமார் கூறுகையில், ‘அலிகாரில் நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 9 பயிற்சி மைய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: