நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை முற்றாக திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதில் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

 

இத்திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்பதை துறை சார்ந்த வல்லுனர்களும், முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள உயர்நிலை அலுவலர்கள், அக்னி பாதை திட்டம் நாட்டின் பாதுகாப்பை ஊனப்படுத்தும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தி வருகின்றனர். ராணுவ அமைப்பில் மாநிலங்கள் வகித்து வரும் சமநிலையை கடுமையாக பாதிக்கும். குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் ஊடுருவ வாய்ப்பளிக்கும் என புகார் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவ தளபதிகளுடன் திரும்ப, திரும்ப ஆலோசித்து வருகிறார். முன்னர் வெளியிட்ட அறிவிப்பில் தளர்வு செய்து அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்துவதாக மீண்டும், மீண்டும் அறிவிப்பது போராடுபவர்களை ஆத்திரமூட்டி வருகிறது.

இப்போது அக்னி பத் திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் என்ற அறிவிப்புக்கு மவுன சாட்சியாக இருந்து வருகிறார். நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: