×

ஒற்றை தலைமை பற்றி பேச யாரும் வர வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவு; சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் 7வது நாளாக இன்றும் தொடர்கிறது

சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் 7வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், ஒற்றை தலைமை பற்றி என்னிடம் யாரும் பேச வர வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையும் மீறி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி (வியாழன்) நடைபெறுகிறது. பொதுக்குழு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும், கட்சியை வழிநடத்தி செல்ல மீண்டும் ஒற்றை தலைமை (பொதுச்செயலாளர்) பதவியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வழியுறுத்தினர். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டம் முடிந்தபிறகு வெளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பிரச்னை கடந்த 7 நாட்களாக அதிமுக கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மாவட்டங்களில் ஆதரவாளர்களுக்கு போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் சென்னைக்கு நேரில் வந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதுதவிர, அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார்கள். சில தலைவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை தெளிவாக தெரிவித்து வந்ததுடன், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவித்துள்ளார். அதன்படி, “அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதுள்ள இரட்டை தலைமையே நீடிக்கும்” என்று கூறியுள்ளார். இந்த கருத்தை வலியுறுத்தி அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அதிமுக பொதுக்குழுவில், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை யாருக்கும் வழங்க வேண்டாம். அப்படி வழங்கினால் ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை புதிதாக உருவாக்கி இரண்டு தலைவர்கள் கட்சியை வழிநடத்தி செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி ஒருங்கிணைப்பாளர் பதவியை காலி செய்துவிட்டு பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்தால், அதிமுக கட்சியின் சின்னம், கொடி ஆகியவை முடக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் எச்சரிக்கையை மீறி எடப்பாடி பழனிசாமி, ஒற்றை தலைமை பதவியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இதற்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பின்னால் இருந்து எடப்பாடியை இயக்கி வருகிறார்கள். அதே நேரம் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எப்படியாவது ஒற்றை தலைமை பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார்.

அதேநேரம், எடப்பாடி அணியினர் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பிரச்னையை கொண்டு வந்தால் அதை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்பது குறித்து அதிமுகவில் உள்ள மூத்த வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஓபிஎஸ் ஆலோசனைகளை கேட்டு வருகிறார். அப்படியே பொதுக்குழுவில், ஒற்றை தலைமை பிரச்னை எழுப்பப்பட்டால், நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் முடிவு செய்துவிட்டார். இந்த முடிவில் அவர் உறுதியாக உள்ளார். அவருக்கு ஆதரவாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.

அதேபோன்று, எடப்பாடி அணியில் இருந்து ஒற்றை தலைமை கோரிக்கை பற்றி பேசுவது என்றால் என்னை சந்திக்க வர வேண்டாம் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனால் எடப்பாடி அணியினர் தரப்பில் இருந்து சமாதான தூது சென்று வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேநேரம், இரண்டு தலைவர்களையும் நேரில் சந்திக்க வைத்தால் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு ஓபிஎஸ் வாய்ப்பு அளிக்க மறுத்து வருகிறார்.

அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஒரு வாரமாக தனது நிலைப்பாடு குறித்து பகிரங்கமாக வெளியில் பத்திரிகையாளர்களுக்கோ அல்லது தொண்டர்களுக்கு அறிக்கை மூலமோ தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். இதனால் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு அமைதியாக நடக்குமா? என்ற சந்தேகமும் அதிமுக தொண்டர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி பொதுக்குழு: ஜெயக்குமார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் அடிமட்ட தொண்டன், மாவட்ட செயலாளர், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவருமே ஒற்றை தலைமை அவசியம் என்ற கருத்தையே கூறுகிறார்கள். இதனால் தான் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த பிரச்னை எதிரொலித்தது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதுபற்றி, இதுவரை எடப்பாடி வாய் திறக்கவில்லை என்கிறீர்கள். அவருக்கு பதில் நான் வாய்திறக்கிறேன். நானும், ஒற்றை தலைமை இவர்தான் என்று யாரையும் சொல்லவில்லை. இதுபற்றி அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெறும். இதில் சுமூகமாக முடிவு எட்டப்படும். எனக்கு பதவி ஆசை கிடையாது. கட்சி நலன்தான் முக்கியம். கட்சியில் நான் அனைத்து பதவிகளையும் பார்த்துவிட்டேன். பதவி ஆசை பிடித்தவன் ஜெயக்குமார், எனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காததால்தான் ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். 2017ம் ஆண்டு ஓபிஎஸ்சுக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தந்தேன். எனக்கு கட்சிதான் முக்கியம். என்ன பிரச்னை என்றாலும் பொதுக்குழுவில் சுமூகமாக முடிவு எடுக்கப்படும். இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து டீ சாப்பிட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். கட்சிக்குள் நடப்பது தொண்டர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால்தான் கடந்த வாரம் கட்சி கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பேசியதை நான் வெளியில் வந்து பேட்டியாக கூறினேன். இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Instructed executives not to let anyone come to talk about single leadership; OPS consultation with legal experts: The climactic conflict in the AIADMK continues today for the 7th day
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்