போடிபாளையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்-பொதுமக்கள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர், வெங்கடேசா காலனி,வடுகபாளையம்,மகாலிங்கபுரம்,டீச்சர்ஸ்காலனி,மரப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, அந்தந்த வார்டு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

அதுபோல், இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது அடிக்கடி நடக்கிறது. போடிபாளையத்திலிருந்து அம்பராம்பாளையம் செல்லும் ரோடு பிரிவில் அடிக்கடி  குழாய் உடைப்பு ஏற்பட்டது.ஆனால், அந்த குழாயை முறையாக சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால்,அந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் குடிநீர் திறக்கும்போது  ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாவது தொடர்கிறது. ஆனால், சம்பந்தபட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ அதனை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுபோன்று, பல்வேறு  இடங்களில் தொடர்ந்து நேர்வதால், குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு குறைகிறது. எனவே, குழாய் உடைப்பை முறையாக சரிசெய்து  குடிநீர் விரயமாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: