×

லாலாப்பேட்டை தருமராஜா கோயிலில் மண்பானை மீது எந்த பிடிமானமும் இன்றி நின்ற ேபார்வாள்-பக்தர்கள் பரவசம்

ராணிப்பேட்டை : லாலாப்பேட்டை தருமராஜா கோயிலில் நேற்று, மண்பானை மீது எந்த பிடிமானமும் இன்றி, போர்வாள் நின்றதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை கண்ணபிரான் சகாய திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடகம் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து, நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, அங்குள்ள மைதானத்தில் துரியோதனின் பிரமாண்டமான உருவ பொம்மை மண்ணால் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், துரியோதனன் மற்றும் பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்தி காட்டினர். இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாலை நடந்த தீமதி திருவிழாவில் விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயில் திருவிழாவின்போது, மண்பானை, போர்வாள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதும், போர்வாளை அம்மன் காலடியில் வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். பின்னர், அம்மனுக்கு தீபாராதனை முடிந்ததும், கோயில் கருவறை முன்பு மண்பானை மீது போர்வாள் நிறுத்தி வைக்கப்படும். பின்னர், அந்த போர்வாளானது சுமார் 48 மணி நேரம், அதாவது வெள்ளி மாலை 6 மணி முதல் ஞாயிறு மாலை 6 மணி வரை, தீமிதி விழா முடியும் வரையில் அப்படியே நிற்கும். பின்னர், அந்த போர்வாள் தானாக விழுந்து விடும்.

அதன்படி, இந்தாண்டு திருவிழாவிலும் அம்மன் அருளால், மண்பானை மீது போர்வாளானது எந்த பிடிமானமும் இன்றி அப்படியே நின்றுள்ளது. இதனை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர் என கோயில் குருக்கள் தெரிவித்தார்.



Tags : Porval ,Lalapettai Darumaraja Temple , Ranipettai: Devotees were ecstatic at the Lalapettai Tharumarajah temple yesterday as the sword stood still without any restraint on the mud.
× RELATED தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12...