×

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் : இந்து அறநிலையத்துறை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடம் இன்றும் நாளையும் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என  இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. பொதுவாக, தீட்சிதர்கள், பக்தர்களை அவமானப்படுத்துவதாகவும், திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், குறிப்பாக, கோயிலில் ஊழல் உள்ளிட்டவை  நடைபெறுவதாகவும், பக்தர்களை அவமரியாதை செய்வது போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் தீட்சிதர்கள் மீது  உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ் பல்வேறு முறைகேடுகள் தவிர்க்கப்பட்டது.

அதன்பின், உச்சநீதிமன்றம் உத்தரவு படி மீண்டும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வசம் சென்றது. இதனால்,தீட்சிதர்களின் அத்துமீறல் பல்வேறு சமயங்களில் அதிகரித்து வந்தது. சமீபத்தில், தீட்சிதர்கள் பட்டியலின பெண்ணை தாக்கியதாக காவல் நிலையம் வரை புகார் சென்றது. இதனால், இக்கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், சிதம்பரம் பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவுபடி, காவல்துறை பாதுகாப்புடன் திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. பின்னர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 7, 8ம் தேதிகளில் அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு, செலவு கணக்குகளை காட்டவேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி சிறப்பு அதிகாரி சுகுமாரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு செலவு கணக்குகளையும் காட்ட மறுத்த அவர்கள், நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு செலவு கணக்குகளை ஒப்படைப்போம், இல்லையேல் நிர்வாக கணக்குகளை காட்ட முடியாது என்றும் தீட்சிதர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

இதனையடுத்து இதுகுறித்து ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு கூறிச்சென்றது. இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவித்திருந்தார். அதாவது, இன்றும், நாளையும் ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் நேரில் சென்றோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் பொதுமக்கள் நேரில் சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி தபால் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்கிற மின் அஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துக்களை அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் நடராஜர் கோயிலை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


Tags : Chidambaram ,Natarajar ,Temple ,Hindu Department , Chidambaram, Natarajar Temple, Consultation, Today-Tomorrow, Department of Hindu Charities
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...