×

ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்; பொதுக்குழுவில் சுமுக முடிவு எட்டப்படும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை..!!

சென்னை: ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 14ம் தேதி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். கூட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அதற்கடுத்த நாட்களில் இருந்து அதிமுகவின் இரண்டு அணிகளும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் ஆதரவு திரட்டி வருகின்றன. பல இடங்களில் போஸ்டர் யுத்தமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். எனது வீட்டுக்கு வந்தால் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்.

அதிமுக ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை; அவரை போல ஓ.பி.எஸ்க்கும் நடக்கும் என கூறுவது தவறு. ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்; யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை; பழனிசாமி பக்கமும் இல்லை எனவும் ஜெயக்குமார் கூறினார்.

Tags : Former Minister ,Jayakumar , Single Leader, General Committee, Jayakumar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்