×

ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்!: குளிர் பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதாவது, பாரிஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானதுடன் இரவு நேரங்களிலும் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தலைநகர் மாட்ரிட்டில் நீர் ஊற்றுகளில் குவிந்த மக்கள் தண்ணீரில் விளையாடியும், மரங்களின் நிழல்களில் படுத்து உறங்கியும் வெப்பத்தை தணித்து கொண்டு வருகின்றனர். அங்குள்ள கட்டிடங்களை குளிர்விக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கியதும், சகாரா பாலைவனம்,  வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் சூடான காற்றுமே தீவிர வெப்பத்திற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வெப்ப நிலை தாக்கமானது குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஸ்பெயினில் வெப்ப அலையால் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியுள்ளது. கட்டலோனியாவுக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 500 ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டன.


Tags : Spain , Spain, hot, cold region, people
× RELATED சில்லி பாயின்ட்…