எண்ணூர் முகத்துவார ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதால் மீன் இனங்கள் அழியும் அபாயம்: தோல் நோய், நுரையீரல் பிரச்னை ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதால் மீன் இனங்கள் அழியும் அபாயம் உள்ளதுடன், தோல் நோய், நுரையீரல் பிரச்னை ஏற்படுவதாக அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நீர்நிலைகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூரில் நெட்டுகுப்பம், தாழங்குப்பம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி போன்ற பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக முகத்துவார ஆற்றில் நண்டு, இறால் மற்றும் மீன் ஆகியவற்றை பிடித்து அதன் மூலம் வரக்கூடிய வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலைகள் தங்களுடைய கழிவுகளை இந்த முகத்துவார ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இந்த கழிவில் ரசாயனம் மற்றும் ஆயில் கலந்து வருவதால் ஆற்று நீரில் ஆயில் திட்டுக்கள் ஆங்காங்கே மிதப்பதோடு, நீர் நச்சுத்தன்மையாகி வருகிறது. இதனால், அங்குள்ள நண்டு, இறால், மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

ஆற்றுநீர் கருப்பு நிறத்தில் மாறி, துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுப் பகுதியில் வசிக்கும்  மீனவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, கண் பார்வை குறைபாடு, மூச்சு திணறல், கர்ப்பம் தரிப்பதில் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதிபடுகின்றனர். எனவே, தொழிற்சாலைகளின் கழிவுகளை முகத்துவார ஆற்றில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்களும், மீனவர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘தொழிற்சாலைகளின் கழிவுகளை அப்படியே வெளியே விடாமல், தித்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதால் செலவு அதிகமாகிறது என்பதால் பல நிறுவனங்கள், தங்களது நச்சுக் கழிவுகளை அப்படியே முகத்துவார பகுதயில் விட்டு விடுகின்றனர்.  

இதனால், சுற்றுப் பகுதியில் வசிக்கும்  மீனவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, கண்  பார்வை குறைபாடு, மூச்சு திணறல், கர்ப்பம் தரிப்பதில் குறைபாடு போன்ற பிரச்னை ஏற்படுகிறது.

இதை கண்காணிக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுப்புற சுகாதார  துறை, நீர்வளம், மண் வளம் போன்ற துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. தொழிற்சாலைகள் மற்றும் முகத்துவார ஆற்றை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதே ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு முக்கிய காரணம்.

பெரு மழைகாலத்தில் பூண்டி ஏரி, புழல் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக முகத்துவார ஆற்றில் இணைந்து கடலில் கலக்கிறது. இங்கு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கடல்நீர் உள்வாங்குவதும், ஆற்று நீர் கடலுக்குள் போவதும் மூச்சு விடுவதைப்போல நடந்து கொண்டேயிருக்கும். ஒரு காலத்தில் முகத்துவார ஆறு சுமார் 25 அடி ஆழம் இருக்கும். ஆந்திராவிலிருந்து கேழ்வரகு, கோதுமை, பாஸ்மதி அரிசி போன்ற உணவு பொருட்கள் ராட்சத  படகு மூலம் கடல் வழியாக முகத் துவாரத்திற்கு வந்து இறக்கி விட்டு இங்கிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் முக்கிய வணிக பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது கழிவுகள் ஆற்றில் தேங்கியதால் இதன் ஆழம்  4  அடியாக குறைந்து விட்டது. இதனால், சாதாரண பைபர் படகு கூட எளிதாக போக முடியாத தோடு, பல மீனவர்கள் பைபர் படகுகள் சேற்றில் சிக்கி கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் முகத்துவார ஆறு அழிந்து கொண்டே வருவதால் மீன்வளத்தை மேம்படுத்த, தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்கவும், அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும், ஆற்றை தூர்வாரி பராமரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆற்றுக்குள் தொழிற்சாலைகள் கழிவுகளை விடுவதை தடை செய்ய வேண்டும். அனல் மின் நிலையத்திலிருந்து கொட்டப்படும் சாம்பல் கழிவுகளை அகற்ற வேண்டும்,’’ என்றனர்.

அலையாத்தி காடுகள்

எண்ணூர் முகத்துவார ஆற்றிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலையாத்தி காடுகள் இருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் இந்த அலையாத்தி காடுகளில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் தற்போது நிறுவனங்களின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் இந்த அலையாத்தி காடுகள் அழிந்து வருவதோடு கடல்வாழ் உயிரினங்களின்  இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. வருங்கால சந்ததியினர் மீன் இனத்தின்  பயன்களை பெற இந்த அலையாத்தி காடுகளை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள்  முன்வர வேண்டும்.

சுடுநீரால் பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தின் உற்பத்தி இயந்திரங்களை குளிர்விக்க கடலிலிருந்து நீரை எடுத்து, பின்னர் இயந்திரங்களை சுத்தம் செய்த பிறகு  அதிலிருந்து வரக்கூடிய சுடுநீரை முகத்துவார ஆற்றில் விடுகின்றனர். இவ்வாறு  விடக்கூடிய சுடுநீரில் ரசாயனம் மற்றும் சாம்பல் கலந்து வருவதால் முகத்துவார  ஆறு மாசடைந்து, மீன்வளம் அழிந்து வருகிறது. இதனால் அனல் மின் நிலையத்தில்  இருந்து விடக்கூடிய சுடு நீரை நேரடியாக ஆற்றில் விடாமல் மாற்று ஏற்பாடு  செய்ய வேண்டும்.

Related Stories: