×

ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் சிக்கினார்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு(45). இவருக்கு சீதா என்ற மனைவியும், ராதா(22) என்ற மகளும் உள்ளனர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது).ராதா திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அவருக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி அவரை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினர்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 14ம் தேதி ராதாவின் உறவினர்கள் அவரை திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்துக்கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்து சென்று முனுசாமி என்ற சாமியாரிடம் பூஜை செய்ய சென்றுள்ளனர். இரவு அங்கேயே தங்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து ராதா தனது உறவினர்களுடன் தங்கினார். அவருக்கு அன்று இரவு பூஜை செய்த நிலையில் மறுநாள் ராதா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாணவி சாவில் மர்மம் இருப்பதால் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாமியார் முனுசாமி திட்டம் போட்டு இறந்துபோன ராதாவை அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு அவருக்கு நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடமும் பொய் சொல்லி கோயிலுக்கு அடிக்கடி வரவழைத்து பூஜை செய்வதாக கூறி தன்வசப்படுத்தி பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது தெரியவந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கு பாலியல் வன் கொடுமையால் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சாமியார் முனுசாமியை திருவள்ளூர் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் மற்றும் காஞ்சிபுரம் குற்றப் புலனாய்வுத்துறை சரக துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Preacher ,ashram ,CBCID , Student commits suicide at ashram, preacher caught, CPCIT police action
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...