×

குண்டும், குழியுமான வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை சீரமைப்பு

கூடுவாஞ்சேரி: தினகரன் செய்தி எதிரொலியால் குண்டும், குழியுமாக கிடந்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் முடிவடையும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை 18 கிலோ மீட்டர் கொண்டது. இந்த சாலையின் இருபுறத்திலும் சரிவர கால்வாய் அமைக்காததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் ஒட்டியபடி உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறி அங்கே குளம் போல் காட்சி அளித்தது.

 இதனால் அப்பகுதியில் சாலை உடைப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் சாலையின் இருபுறத்திலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் குடும்பத்துடன் பைக்குகளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து எழுந்து படுகாயத்துடன் செல்கின்றனர். மேலும் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால்  சாலையோரத்தில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மீது கழிவு நீர் பீய்ச்சி அடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.   

இதுகுறித்து கடந்த 10-ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குண்டும், குழியுமாக கிடந்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை சீரமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

Tags : Vandalur-Kelambakkam road , Vandalur-Kelambakkam, Road, Rehabilitation
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...