×

11 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட கொக்கிலமேடு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்: பள்ளி மாணவிகள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் மற்றும் கொக்கிலமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோவளத்தில், இருந்து மேற்கண்ட பகுதிகள் வழியாக டி 117 தடம் எண் கொண்ட ஒரு மாநகர பேருந்து கொக்கிலமேடு வரை இயக்கப்பட்டு  வந்தது.  அந்த பேருந்து கடந்த 11 ஆண்டுளுக்கு முன் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி திடிரென நிறுத்தப்பட்டது.

  இதனால் அக்கிராமத்திலுள்ள பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நகர்ப்புறங்களுக்கு வந்து செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். திடிரென, நிறுத்தப்பட்ட மாநகர பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும் என பல முறை மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், கிராம மக்கள் சார்பில் நேரில் சென்று மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

எனவே, பொதுமக்கள், பள்ளி மாணவிகள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வண்ணம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மாநகரப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து, பள்ளி மாணவிகள் கூறுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவளத்தில் இருந்து கொக்கிலமேடு வரை மாநகர பேருந்து இயங்கி வந்தது. அந்த பேருந்து திடிரென நிறுத்தப்பட்டது.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதேப் போல், சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். 


Tags : Kokkilamedu , Kokkilamedu bus, school students, request
× RELATED கொக்கிலமேடு கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்