×

கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.309 கோடியில் ஒருங்கிணைந்த வடிகால்: மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கடற்பாசி பூங்காக்கள் போன்றவை இடம்பெறுகிறது

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.309 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கடற்பாசி பூங்காக்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள், மழைக் காலங்களில் நிரம்பி வழிகின்றன. எனவே, அவை அகற்றப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில், வடிகால் வலையமைப்பை நிறுவ (கோவளம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம்) மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது உருகிய பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் மின்னணு கழிவுகளால் செய்யப்பட்டதாக இருக்கும். மேலும் அங்குள்ள மண்ணுக்கு ஏற்ற வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கடற்பாசி பூங்காக்கள் போன்றவை அமைக்கப்படும். இது வெளிநாடுகளில் உள்ளது போல் மாசுபட்ட நீர் கடலில் விடப்படுவதை தடுக்கவும், கான்கிரீட் வடிகால்களை அகற்றவும் உதவும்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மற்றும் நிலையான தீர்வுகளை செயல்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி கோவளம் பகுதியில் கான்கிரீட் பெட்டி வடிகால்களுக்கு பதிலாக இயற்கை உள்கட்டமைப்பை அமைக்க முன்மொழிந்துள்ளது.

வழக்கமான வடிகால்களில் இருந்து தண்ணீர் வெளியேறும் 46 இடங்களில், ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக இருப்பதால் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில், பசுமை தீர்ப்பாய தடை உத்தரவு காரணமாக கான்கிரீட் வடிகால் திட்டத்தை மாநகராட்சி கிடப்பில் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முடியும் இடங்களில் சுற்றுச்சூழல் தடுப்புகள் மற்றும் ஊடுருவல் பெட்டிகளை அமைத்து மழை நீரை செயற்கை குளங்களில் சேகரிப்போம். குறைந்த அளவு அல்லது தண்ணீர் தேங்காத இடங்களில் மரத்தோட்டங்கள் போன்ற தாவர படுக்கைகள் பயன்படுத்தப்படும். கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் செயற்கை ஈரநிலங்களும் அமைக்கப்படும். மேலும் தொட்டிகள், மழைநீரை உறிஞ்சுவதற்கு நீர் படுக்கைகள் கொண்ட நகர்ப்புற பூங்காவை உள்ளடக்கிய கடற்பாசி பூங்காக்களும் அமைக்கப்படும். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து சாலைகளிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே தண்ணீர் சேமிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் கூடிய குழு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து தயாரிக்குமாறு கூறியுள்ளது. அவர்கள் அதை சமர்ப்பித்ததும் நாங்கள் திட்டத்தை முன்னெடுப்போம், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மழைநீர் சேகரிப்பு நிபுணர்கள் கூறுகையில், ‘இந்த புதிய முறையானது நிலத்தடி நீரை அதிகரிக்கும் மற்றும் 15-20% குறைந்த செலவில் அதிக ஆயுளுடன் வெள்ளத்தை குறைக்கும்’ என்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்க வேண்டும். அவை கடல் அல்லது கடற்கரகைக்கு அருகில் இடம்பெறக்கூடாது,’ என்றனர்.

இதுபோன்ற திட்டம் முதலில் ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும், என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கான்கிரீட் வடிகால்களை விட 20% செலவினம் குறைவு. சுமார் 52 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.309 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி பூங்காவில் பணிபுரிவோர் கூறுகையில், ‘இந்த திட்டத்திற்கான முதலீடு மிகவும் குறைவாக உள்ளது. பசுமை உள்கட்டமைப்பு செலவுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொது சுகாதாரம், பல்லுயிர் வெப்ப தீவு விளைவு, மாசு குறைப்பு மற்றும் மீள்தன்மை உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நன்மைகளை உருவாக்கவும் முடியும். இந்த முறையானது சீனா, தாய்லாந்து, சிங்கப்பூரில் பரவலாக செயல்படுத்தப்படுகிறது’ என்றனர்.

Tags : East Coast Road , East Coast Road, integrated drainage, rainwater harvesting system, sponge parks,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்