×

பக்தர்கள் வருகை அதிகரிப்பு திருப்பதியில் 21 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதியில் பக்தர்கள்  வருகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால்  சுமார் 21 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார இறுதிநாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். கடந்த சில வாரங்கள் வரை பள்ளி கோடை விடுமுறை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் நிரம்பி ஆஸ்தான மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 84,982 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். 46,982 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.4.42 கோடி காணிக்கை கிடைத்தது.

இந்நிலையில் நேற்று காலை முதலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுமார் 21 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஸ்தான மண்டபம் வரை நீண்டவரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், காலை சிற்றுண்டியாக உப்புமா, காலை 11 மணிக்கு மேல் சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. இப்பணிகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்ரீவாரி ேசவாவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.



Tags : Tirupati ,Swami ,Darshan , Increase in attendance of devotees, Tirupati, Swami Darshan
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...