×

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டம்: ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடிக்க இலக்கு; நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த 5 ஏரிகள் 11.50 டிஎம்சி ெகாள்ளளவு கொண்டது. இதன் மூலம், ஆண்டு முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பாசனத்துக்கு பயன்படுத்தப்படாத ஏரிகளை அடையாளம் கண்டு அந்த ஏரிகளை குடிநீர் பயன்பாட்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுளது.

அதன்படி, சென்னை கொரட்டூர் ஏரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இந்த ஏரியின் தண்ணீர் கடந்த 1950க்கு முன்பு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் பட்டரவாக்கம், அம்பத்தூர், ஆத்திப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட கழிவு நீர் ஏரி கலந்ததால், தண்ணீர் மாசடைந்தது.
இதனால், அந்த ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஏரியில் குப்பை கொட்ட தொடங்கியதால் கொரட்டூர் ஏரி குப்பை மேடாக காட்சியளித்த நிலையில், அந்த ஏரியை குடிநீர் பயன்பாட்டுக்கு மாற்றும் வகையில், நீர்வளத்துறை, குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து, அம்பத்தூர் உபரி நீர் கால்வாயில் சட்ட விரோதமாக கழிவு நீர் திறக்கப்படுவதால் கொரட்டூர் ஏரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், குடிநீர் வாரியம் சார்பில் தொழிற்சாலைகளில் வீடுகளின் கழிவு நீர் இணைப்பை அகற்றி வருகிறது. அதற்கு மாற்றாக கழிவு நீர் திருப்பி விடுவதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏரிக்கு சட்ட விரோதமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியும். தற்போது, இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும், என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* ரூ.2.40 கோடி நிதி
நீர்வளத்துறை சார்பில் கொரட்டூர்  ஏரியில் குறுகிய கால சீரமைக்கும் திட்டத்தின் கீழ் புனரமைக்க ரூ.2.40 கோடி  தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை கொண்டு கொரட்டூர் ஏரிக்கும்  வரும் நீரை முறைப்படுத்தி  வெளியேற்றுவதற்காக கற்களை கொண்டு கலிங்குகள்  ஏற்படுத்தப்படுகிறது. மேலும், ரெகுலேட்டர் கட்டப்படுகிறது. அதே போன்று  2.930 மீட்டர் நீளத்துக்கு வேலி அமைக்கப்படுகிறது.

Tags : Korattur Lake ,Chennai , Plan to stop mixing of sewage in Korattur Lake and use it for drinking water needs of the people of Chennai: target to complete the works by August; Water Resources Officer Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...