வடபழனி அழகர் பெருமாள் கோயில் உள்பட 7 கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 7 கோயில்கள் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொபர்பாக அறிக்கை சமர்பிக்க ஆணையர் குமரகுருபரன் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நகரமயமாதல் காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இதை தடுக்க கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறு குடியமர்வு செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீர்நிலைகள், கோயில் குளங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக இளங்கோ, கண்ணதாசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், சென்னை, மதுரையில் உள்ள 8 கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிடடுள்ளார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொது இடங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் குறித்து கண்ணதாசன் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதே பொருண்மை தொடர்பாகவும், கோயில் குளங்கள் குறித்த ஆக்கிரமிப்புகள் குறித்தும், கோயில்கள் இடிக்கப்பட்டது குறித்தும் ஜி.இளங்கோ என்பவரால் 2 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இரண்டு வழக்குகளும் ஒருங்கிணைத்து 22.4.2022 அன்று விசாரணைக்கு வரப்பெற்று 27.6.2022 அன்று மறு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகளுக்கு துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால் சென்னையில் உள்ள 8 கோயில்களின் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த அலுவலகம் சார்பில் 8.6.2020 அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் தற்போதைய நிலை விவரங்களை சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர்களிடமிருந்து பெற்று அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும், அறிக்கையினை அனுப்ப வேண்டும்.

அதன்படி சென்னை, வடபழனி வரசக்தி பிள்ளையார் கோயில், வடபழனி, மதுரை ஏழுகடல், மீனாட்சியம்மன் கோயில், சாலிகிராமம் பொன்னியம்மன் கோயில், விருகம்பாக்கம் காளியம்மன் கோயில், போரூர் ராமநாதசுவாமி கோயில், புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோயில், வடபழனி அழகர் பெருமாள் கோயில், மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ஆகிய 8 கோயில்களில் ஆக்கரமிப்புகளை அகற்ற நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: