உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்புமனு தாக்கல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ம் தேதி தற்செயல் தேர்தல் நடைபேறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இப்பதவியிடங்களில் 34 பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவியிடங்களுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் பெற கடைசி நாள் 27ம் தேதி மாலை 5 மணி ஆகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 30ம் தேதி மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஜூலை 9ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: