×

சிறுவாணி அணை விவகாரத்தில் கேரள முதல்வர் நேரடியாக தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த நிலையில், அதனை மீண்டும் வலியுறுத்தி கேரள முதல்வர் இந்த விசயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் நகரின் முதன்மையான நீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது, ​​கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தேவையான 265 எம்.எல்.டி நீர் தேவையில், 101.40 எம்.எல்.டி., சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்ட இத்திட்டத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த 1973ம் ஆண்டு  கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக 99 ஆண்டுகள்,  ஆண்டுதோறும் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) 1.30 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முழு நீர்த்தேக்க மட்டமான 878.50 மீட்டருக்கு பதிலாக கேரள நீர்ப்பாசனத் துறையானது சிறுவாணி அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை 877 மீட்டராகப் பராமரித்து வருகிறது. நீர்மட்டத்தை 1.5 மீட்டர் குறைப்பதால், 122.05 எம்சிஎஃப்டி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது மொத்த சேமிப்பில் 19% ஆகும். இதனால் கோடை காலங்களில் கோவை நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1.30 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக, 0.484 டிஎம்சி முதல் 1.128 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது. முழு நீர்த்தேக்க மட்ட வரையிலான நீர் சேமிப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்கள் தரப்பில் உள்ள அதிகாரிகளிடம் எங்கள் குழு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த பிரச்னையில் நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். இருப்பினும், இதுவரை கேரள நீர்ப்பாசனத் துறையால் சேமிப்பை முழு நீர்த்தேக்க மட்டத்திற்கு மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவை மாநகரம் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உங்கள் தனிப்பட்ட தலையீட்டை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தை எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை மட்டுமே உதவும். இது தொடர்பாக சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Chief of Kerala ,Shiruvani ,Dam ,Chief President ,CM K. Stalin , Kerala Chief Minister should directly intervene in the Siruvani Dam issue and take immediate action: Chief Minister MK Stalin's letter
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...