×

சசிகலாவுடன் சேர்ந்தாலும் பாதிப்பு இல்லை அதிமுகவை உடைக்க ஓபிஎஸ்சால் முடியாது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி

சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். சசிகலாவுடன் ஓபிஎஸ் சேர்ந்தாலும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்று கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம், மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் கோவில்பட்டியில் நடந்தது. பின்னர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி: சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை நானும் பிரதிபலித்தேன். இதற்கு ஓபிஎஸ் சம்மதிப்பார் என்று கருதுகிறேன். அவர் சம்மதிக்காவிட்டாலும், பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகார அமைப்பு. அதன் முடிவை பின்னர் அவர் ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்து மற்ற பதவிகளை பெறுவார் என்று நம்புகிறேன்.

ஓபிஎஸ் கட்சியை உடைப்பார் என்பது நிறைவேறாது. ஏனென்றால் எந்த கட்சியிலும் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எங்கு இருக்கிறார்களோ, அந்த அணிக்கே கட்சி சின்னம், கொடி ஒதுக்கப்படும். எடப்பாடியை தான் பெரும்பான்மையானவர்கள் ஆதரிக்கின்றனர். எனவே இரட்டை இலைக்கோ, கட்சி கொடிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலா அதிமுகவிலேயே இல்லை. அவருடன் ஓபிஎஸ் சேரமாட்டார் என்று நம்புகிறேன். அப்படியே சேர்ந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் ஒற்றைத் தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என்றும், எடப்பாடிக்கே ஆதரவு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜவின் 2வது அணி ஓபிஎஸ்: தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயசிங் தியாகராஜ் நேற்று அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வத்தை சுயநலவாதி என்று தொண்டர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். வணங்கி பணிகிறவர்கள் எங்களுக்கு தேவை இல்லை. துணிச்சலாக அதிமுக, தொண்டர்களை பாதுகாக்கும் தலைமை வேண்டும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை பாதுகாத்து மீட்டெடுத்து கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம் கிடைக்காது, கட்சி பெயர் போய் விடும் என்று மிரட்டும் அளவுக்கு சென்று விட்டார். அவருக்கு கட்சி பதவி இல்லையென்றால், கட்சியை அழித்து விடுவோம் என்ற நிலைக்கு சென்று விட்டார்.

கட்சி, சின்னம் போய்விடும் என்று மிரட்டுவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சி தொண்டர்களை அரவணைத்து செல்ல முடியவில்லை. அவரது மகனை மட்டுமே வெற்றி பெறச் செய்தார். கையால் அதிமுக பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டும். கட்சியை ஓ.பன்னீர்செல்வம் உடைத்துவிட்டு சென்றாலும், கட்சியினர் யாரும் அவர் பின்னால் செல்லமாட்டார்கள். அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் முதல்-அமைச்சராக இருந்தார். அதிமுக.வில் 90% பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆதரிக்கின்றனர். ஓபிஎஸ் பாரதிய ஜனதா கட்சியின் 2வது அணியாக செயல்படுகிறார் என்பதுதான் உண்மை. என்றார்.

Tags : Sasikala ,Raju ,MLA , OBS will not be able to break AIADMK: Kadampur Raju MLA Interview
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!