×

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டம் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு: கண்காணிப்பு வளையத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள்

சென்னை: அக்னி பாதை திட்டத்தை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் எதிரொலியாக சென்னை நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டம் இந்தியா பாதுகாப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே அரியானா, பீகார், டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது ரயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் பெட்டிகளும் தீக்கிரையானது. நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் தலைமை செயலாகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒன்று கூடி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் எதிரொலியாக நேற்று சென்னை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திராவில் இருந்து சென்னையை இணைக்கும் சாலையின் இடையே போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து சோதனை நடத்தினர். வடமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று முன்தினம் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் குதித்ததால், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை தடுப்புகள் அமைத்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பிறகு நேற்று 10 மணிக்கு மேல் போலீசார் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகளுடன் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்தனர். நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தடை விதிக்கப்பட்ட இந்த பகுதியில் 2 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

வெளிமாநிலத்தவர்கள் யாரேனும் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்களான என சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள லட்ஜிகளில் போலீசார் சோதனை நடத்தினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேற்று மெரினா கடற்கரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டும், மெரினா கடற்கரையை இணைக்கும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. அக்னி பாதை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags : Napier Bridge ,War Memorial , Police set up barricades from Napier Bridge to War Memorial in protest against Agni Road project: Central, Egmore Railway Stations at Surveillance Ring
× RELATED நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம்...