பஞ்சாப் பாடகர் கொலை வழக்கில் திருப்பம்; பாலிவுட் தயாரிப்பாளரை மிரட்டி ரூ5 கோடி பறிக்க திட்டம்: குற்றவாளிகளின் வாக்குமூலத்தில் பரபரப்பு

புனே: பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரை மிரட்டி ரூ. 5 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட தண்டனை கைதியான தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவின் நெருங்கிய உதவியாளர் சித்தேஷ் காம்ப்ளே என்பவரை பிடித்து புனே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சித்தேஷ் காம்பளே விசாரித்து வரும் நிலையில், ​டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, பஞ்சாப் தனிப்படை போலீசார் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக் குழுக்களுக்கு முன்பாக சித்தேஷ் காம்ப்ளே அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாடகர் சித்து மூஸ் வாலா கொலைச் சதியின் பின்னணியில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.

சந்தோஷ் ஜாதவ் மற்றும் நாக்நாத் சூர்யவன்ஷி ஆகியோர் கொலை சம்பவத்தை நிறைவேற்றினர். இந்த கும்பலின் எதிர்காலத் திட்டம் என்னவென்றால், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரை மிரட்டி ரூ.5 கோடியை பணம் பறிக்க திட்டமிட்டு இருந்தது. இதேபோல் பாலிவுட் பிரபலங்களை (சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் உட்பட) மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டிருந்தனர். இதன் பின்னணியில் கனடாவில் வசித்து வரும் தாதா கோல்டி பிராரின் சகோதரர் விக்ரம் பிரார் உள்ளான்.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மற்றும் சீக்கிய சமூகத்தின் புனித நூலை அவமதித்ததாகக் கூறப்படும் மருத்துவர் ஒருவரும் கொலைப் பட்டியலில் உள்ளனர். தற்போது சித்தேஷ் காம்ப்ளேவை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: