புத்துயிர் பெறுகிறது பனமரத்துப்பட்டி ஏரி; கருவேல மரங்களை வெட்டி எடுக்க ரூ.1.84 கோடிக்கு ஏலம்.! சிறந்த சுற்றுலா தலமாக உருவாக வாய்ப்பு

சேலம்: பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி எடுத்து கொள்ள சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.1.84 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் குற்றுயிராக கிடக்கும் பனமரத்துப்பட்டி ஏரி, விரைவில் புத்துயிர் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றிலும் விளைநிலங்கள் சூழ்ந்த பனமரத்துப்படி ஒரு காலத்தில் விவசாயிகளின் சொர்க்கபூமியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1911ம் ஆண்டு வாக்கில் ரூ.9.68லட்சம் மதிப்பில் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு.

1924ம் ஆண்டில் சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. அதேநேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர், ஜெயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே  படமானது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவு ெகாண்டது. இந்த ஏரி தற்போது வரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு மேல், ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது.

இதனிடையே, பனமரத்துப்பட்டி ஏரியின் நீரை, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீராக வழங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார். இதையடுத்து பனமரத்துப்பட்டி ஏரியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஏரியின் பரப்பளவு ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி, மழைக்காலங்களில் ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், ஏரியை அகலப்படுத்த வேண்டும்.

ஏரியை ஆழப்படுத்தி கரைகளை வலுப்படுத்துவது, தற்போது ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது, ஏரியை தூர்வாரி நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பும் போது ஏரியில் இருந்து சேலம் மாநகரம், பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றியுள்ள பிற நகரங்களுக்கு எந்த வகையில் குடிநீர் வழங்க முடியும் என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஏரியில் 800ஏக்கர் பரப்பளவில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றும் வகையில், டெண்டர் விடப்பட்டது. இதனை ரூ.1.84 கோடிக்கு கருவேலமரங்களை வெட்டி எடுத்து கொள்ள, சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கான பணி வழங்கியதும், விரைவில் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஏரியில் உள்ள கருவேல மரங்களை  அகற்றும் பணி நடைபெறுகிறது. கருவேல மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள ரூ.1.84 கோடிக்கு, சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதற்கான பணி விரைவில் தொடங்கும். இப்பணி முடிந்ததும், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,’ என்றனர். இந்த பணிகளால் குற்றுயிராக கிடக்கும் பனமரத்துப்பட்டி ஏரி, மீண்டும் புத்துயிர் பெற்று பசுமை பரப்பும் தலமாக மாறும். சிறந்த சுற்றுலாத்தலமாக உருவெடுத்து சேலத்தின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்கின்றனர் நீர்வள ஆர்வலர்கள்.

Related Stories: