×

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்; டெல்டா அதிமுகவினர் யார், எந்த பக்கம்?.. ஆள் பிடிக்கும் படலம் ஜரூர்

திருச்சி: ஒற்றை தலைமை விவகாரம் ெவடித்துள்ள நிலையில், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆள் பிடிக்கும் படலம் ஜரூராக உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் 23ம் தேதி பொதுக்குழு கூட உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிடிவாதமாக இருப்பதால், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே உள்ளனர். எனினும் இருதரப்பும் ஆள்பிடிக்கும் படத்தை துவக்கி உள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் இரண்டு கோஷ்டியினரும் போஸ்டர், பிளக்ஸ் பேனர் யுத்தம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜசேகர் மட்டும் ஓபிஎஸ் பக்கம் உள்ளார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் இபிஎஸ்சை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது, அவர் பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயபால் சென்றார். ஆனால் இப்போது மதில்மேல் பூனையாக உள்ளார். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான காமராஜ் சொல்வது தான். அவர், இபிஎஸ் பக்கம் இருப்பதால், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் பக்கமே திரண்டுள்ளனர்.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓபிஎஸ் பக்கம் உள்ளார். இவர் சொல்வதை தான் தஞ்சையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கேட்பார்கள். இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளது. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், இபிஎஸ் பக்கம் உள்ளார். இந்த மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் இபிஎஸ் பக்கமே உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, சந்திரமோகன், சக்தி, ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் இபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஓபிஎஸ்சை ஆதரிக்கிறார். அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் பக்கம் உள்ளனர். திருச்சியில் வடக்கு, தெற்கு, மாநகர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி இபிஎஸ் பக்கமும், முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோரும் எடப்பாடிக்கு கைகொடுத்துள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக ஒரு கோஷ்டி செயல்படுவது அந்தக் கட்சியில் எப்போதுமே சகஜமாகும். அந்த கோஷ்டியினரை வளைத்துப் பிடிக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கிறது. அதே நேரத்தில் எதிர் கோஷ்டியை சரிகட்ட இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களும்  முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்லமண்டி நம்பரை பார்த்ததும் எஸ்கேப்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன் இப்போது சென்னையில் உள்ளார். அவர் சென்னையில் இருந்தபடியே செல்போனில் தனது மாவட்ட நிர்வாகிகளான பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசி, ஓபிஎஸ் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இதில் பலர், நான் உங்கள் பக்கம் தான்னே, என்று பேசி டிமிக்கி ெகாடுக்கின்றனர். ஆனால், அவர் பக்கம் செல்லவில்லை. வெல்லமண்டி நடராஜனின் போன் நம்பரை பார்த்தாலே, பலர் போனையே எடுப்பதில்லை என்றும்  கூறப்படுகிறது.

மாஜி அமைச்சர் பேட்டி
இதுபற்றி திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனிடம் ேகட்ட போது, கட்சியின் நலன் கருதி ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இணைந்து இன்னும் 2 நாளில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலையை முடக்கும் அளவுக்கு பிரச்னை போகாது. நான் அதிமுக பக்கம் இருக்கிறேன் என்றார்.

Tags : OPS-EPS conflict over single leadership issue; Who is the Delta superhero and which side?
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...