தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தருகின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

பெரம்பூர்: தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் தருகின்றார் என்று அமைச்சர் கேஎன்.நேரு பேசினார். கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி திமுக சார்பில், ‘’வேருக்கு விழா “சொல்லாற்றல் அரங்கம்” என்ற பெயரில் சூளை அங்காளம்மன் கோயில் தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எழும்பூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் சொ.வேலு தலைமை வகித்தார். இதில், “பொதுமறை குறளொவியம்! போற்றுமே அறிவாலயம்!” என்னும் தலைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், தயாநிதி மாறன் எம்பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது; அனைத்தையும் அறிந்துக்கொண்டு செயலாற்றக்கூடிய தலைவர் கலைஞர். இந்த இயக்கத்தில் கலைஞர் செல்வதை நிறைவேற்றும் வகையில் திமுக எங்களை வளர்த்தது. மாநாட்டினை முறையாகவும் சரியான முறையிலும் நடத்துவதில் வள்ளவர் கலைஞர். தமிழ்நாட்டில் என்ன நடக்கும், யார் என்ன செய்வார்கள் என்பதை துல்லியமாக கண்டறிந்து செயல்படுபவர் கலைஞர்.

ஆட்சிக்கு வரும்போது அதிகமாக இருந்த கடன் சுமையை கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்சியினை முதல்வர் செய்து வருகிறார். இந்துக்களுக்கு எதிரான ஆட்சியாக திமுக ஆட்சியை மாற்ற பாஜ செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாததற்கு திமுக அரசின் கொள்கையே காரணம். இவ்வாறு பேசினார். அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘’மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு என்று சொல்லும் வகையில் களப்பணிக்கு ஒரு உதாரணமாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திகழ்கிறார். கலைஞரின் 100வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடுவோம். கலைஞரின் 125ம் ஆண்டு பிறந்தநாளில் திமுகவின் கால் நூற்றாண்டு ஆட்சியினை தொடருவோம்’ என்றார்.

தயாநிதி மாறன் பேசும்போது, ‘’ கடவுளையும் கோவிலையும் எதிர்க்கும் கட்சி திமுக கட்சி என பல்வேறு நபர்கள் ஏளனம் செய்தார்கள். ஆனால் ஏளனம் பேசிய அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜ அரசு பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை என்று கூறி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது’ என்றார். காதர் மொய்தீன் பேசுகையில், ‘’ முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கான ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார். திமுகவை கட்டி வளர்ப்பதில் கலைஞருக்கு நிகர் யாரும் இல்லை.

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை நேரடியாக தெரிந்து முஸ்லீம்களின் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை தெரிந்து செயல்படுபவர் கலைஞர். சங்க தமிழ் இலங்கியங்களையும் தமிழையும் மக்கள் புரியக்கூடிய வகையில் அவர்களிடம் கொண்டு சேர்த்து தமிழை காத்தவர் கலைஞர். அவர் வாழ்வு முழுவதும் தமிழுக்காகவே இருந்தது’ என்றார்.

Related Stories: