×

தமிழகத்தில் சமச்சீர்‌ தொழில்‌ வளர்ச்சி அடைய சிட்கோ தொழிற்சாலை 6 இடங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது

ஊட்டி:  தமிழ்நாடு முழுவதிலும்‌ சமச்சீர்‌ தொழில்‌ வளர்ச்சி அடைய 6 இடங்களில் சிட்கோ தொழிற்சாலை உருவாக்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகிறது என அமைச்சர் அன்பரசன் ஊட்டியில் தெரிவித்தார். தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலை மற்றும் ஊட்டி அருகேயுள்ள அல்லஞ்சி குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உடன் இருந்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர்‌ அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: குன்னூர்‌ இண்ட்கோர்வ்‌ தொழிற்சாலையில்‌ தொழிற்கூட்டுறவு தேயிலைத்‌ தொழிற்சாலைகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இண்ட்கோர்சர்வ்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ 16 தேயிலை தொழிற்சாலைகள்‌ செயல்பட்டு வருகின்றன. இத்தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.68 கோடி மதிப்பில்‌ புதிய இயந்திரங்கள்‌ வாங்கபட்டு வருகிறது. தனியாருக்கு நிகராக தேயிலை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆண்டிற்கு 6 லட்சம்‌ கிலோ தேயிலை உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்‌ கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அல்லஞ்சி பகுதியில்‌ தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாடு வாரியத்தின்‌ சார்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ புதிய குடியிருப்புகள்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடியிருப்புகளானது ஆண்டிற்கு ரூ.3 லட்சம்‌ வருமானம்‌ உள்ள மற்றும்‌ வேறு எங்கு வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்பிற்கு பயனாளியின்‌ பங்களிப்பு தொகையாக ரூ.3.45 லட்சமும்‌, மாநில அரசு மானிய தொகை ரூ.6.01 லட்சமும்‌, ஒன்றிய அரசின்‌ மானியத்தொகை ரூ.1.50 லட்சமும்‌ சேர்ந்து மொத்தம்‌ ரூ.10.96 லட்சம்‌ மதிப்பில்‌ கட்டிக்‌ கொடுக்கப்படுகிறது.

அதனடிப்படையில்‌ இப்பகுதியில்‌ ரூ.19.71 கோடி மதிப்பில்‌ 180 குடியிருப்புகள்‌ கட்டும்‌ பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌ கட்டி முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்‌ தொடங்குவதற்காக பல்வேறு வங்கி கடனுதவிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. ஓராண்டு காலத்திற்குள்‌ தமிழ்நாடு முழுவதிலும்‌ சமச்சீர்‌ தொழில்‌ வளர்ச்சி அடைய 6 பகுதிகளில்‌ சிட்கோ தொழிற்சாலை உருவாக்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, குன்னூர்‌ வட்டத்திற்குட்பட்ட சின்ன கரும்பாலம்‌ பகுதியில்‌ குறு சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌, குழும மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ அமைக்கப்பட்ட பொது வசதி மையமானது ஒன்றிய அரசின்‌ மானியத்தொகை ரூ.227.18 மதிப்பிலும்‌, மாநில அரசின்‌ மானியத்தொகை ரூ.28.40 மதிப்பிலும்‌, சிறப்பு நோக்கு ஊர்தி ரூ.28.40 லட்சம்‌ மதிப்பிலும்‌ என மொத்தம்‌ ரூ.283.98 லட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்ட உல்லன்‌ கிளஸ்டர்‌ பொது வசதி மையத்தினை இன்று துவக்கி வைக்கப்பட்டது.

குறு, சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌, குழும மேம்பாட்டு திட்டமானது, குறு மற்றும்‌ சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ ஆதாரங்கள்‌ மற்றும்‌ நிதி பெறுதல்‌ தலமாகவும்‌ மற்றும்‌ சந்தையில்‌ போட்டியிடும்‌ திறனை அதிகரிப்பதற்காகவும்‌ வரையறுக்கப்பட்ட பூகோள பரப்பளவில்‌ குழுமங்களை உருவாக்கி தொழில்களின்‌ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது இதன்‌ நோக்கமாகும், என்றார்.

ஆய்வின் போது, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அரசு செயலர்‌ அருண்ராய்‌, கலெக்டர் அம்ரித், ‌திட்ட இயக்குநர்‌, சிறப்புப்‌ பகுதி மேம்பாடு திட்டம்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அலுவலர்‌(பொ), இண்ட்கோசர்வ்‌, மோனிகா ராணா, குன்னூர்‌ சார்‌ ஆட்சியர்‌ தீபனாவிஸ்வேஷ்வரி, கட்டபெட்டு தொழில்‌ கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின்‌ தலைவர்‌ சுமதி சிவராஜ்‌, இண்ட்கோசர்வ்‌ பொது மேலாளர்‌ அக்பர்‌, துணை பொது மேலாளர்‌ சங்கரநாராயணன்‌, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்‌ முதன்மை பொறியாளர்‌ ராஜசேகர்‌, கண்காணிப்பு பொறியாளர்‌ நஞ்சப்பன்‌, செயற்பொறியாளர்‌ வெங்கடேசன்‌, உதவி பொறியாளர்‌ விவேக்‌ உட்பட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.


Tags : Citco Factory ,Tamil Nadu , SIDCO Factory is being set up at 6 locations to achieve balanced industrial growth in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...