×

அக்னிபாதை ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக திருச்சியில் இளைஞர்கள் போராட்டம்

திருச்சி: அக்னிபாதை ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக திருச்சியிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்னும் திட்டத்தின் மூலம் 4 ஆண்டு பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

வடமாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சியில் ஜங்சன் ரயில் நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையம் முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

 இதை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் திட்டமாகவும் செயல்பட்டு வருகின்றது. இதுபோன்ற நிலை உருவானால் ராணுவத்தின் புனிதம் கெட்டுவிடும். அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றனர்.

Tags : Trichy ,Agnipadai , Youth protest in Trichy against the Agnipathai Army recruitment program
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்