கந்தர்வக்கோட்டை அருகே தெற்குசெட்டியா சத்திர குளத்தில் காடுபோல் வளர்ந்த கோரைபுற்கள்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை புதுகை-அரவம்பட்டி சாலையிலுள்ள தெற்கு செட்டியா சத்திரம் குளத்தை தூய்மை செய்து நான்கு புறமும் குளிக்கும் படித்துறைகளை கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு-பகல் பாராது மக்கள் எப்பொழுதும் குளித்தும், துணி துவைத்துக் கொண்டு இருப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். குளத்தின் அருகிலேயே உடையார் தெரு, முத்தரையர்கள் தெரு, முகமதியர் தெரு, அண்ணாநகர், மற்றும் புதுக்கோட்டை சாலை மற்றும் அரவம்பட்டி சாலையில் உள்ளதால் இந்த வழியே செல்லும் மக்கள் தினசரி ஆயிரக்கணக்கில் குளித்து துணி துவைத்து வருகின்றனர்.

காலை பொழுதுகளிலும், பின் மாலைப் பொழுதுகளிலும் பெண்கள் துணி துவைத்து குளித்து வருகிறார்கள். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகம் குளத்தில் உள்புறம் உள்ள கோரை புல்களை அகற்றி படித்துறைகளை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படித்துறை சரியில்லாமல் இருப்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் தவறி விழுந்து இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இது போல் வரும் காலங்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க உடனடியாக குளத்தின் உள்புறம் சுற்றியுள்ள கோரை புல்களை அகற்றி மக்கள் குளிக்கும் படித்துறைகளை கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: