தொடரை வெல்லப்போவது யார்?: இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் தொடக்கம்

பெங்களூரு: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  முதல் இரு ஆட்டங்களில் தடுமாறிய இந்திய அணி, கடைசி இரு ஆட்டங்களில் அபாரமாக விளையாடி அஸ்த்தியது. 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியை 131 ரன்னில் சுருட்டிய இந்திய பவுலர்கள் கடந்த ஆட்டத்தில் வெறும் 87 ரன்களுக்கு ஆள்அவுட் ஆக்கினர்.

இது சர்வதேச டி20 போட்டிகளில்  தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோராக அமைத்தது. பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். பேட்டிங்கில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் நல்ல பார்மில் உள்ளனர்.    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை, டெல்லி, கட்டாக் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தியது.

டேவிட் மில்லர், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென் அரைசதம் அடித்தனர். ஆனால் முந்தைய இரு ஆட்டங்களில் சொதப்பிய அவர்கள் மீண்டும் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் கடந்த 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அந்த அணிக்கு அவசியமாகும்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்புடன் உள்ளது. இந்திய வீரர்கள் உள்ளூரில் தொடரை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Related Stories: