வடகிழக்கு பருவ மழையின்போது சேதமடைந்த பூண்டி ஏரியின் மதகுகள் ரூ.10 கோடியில் சீரமைப்பு: 3 மாதத்திற்குள் முடிக்க திட்டம்; நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையின்போது  பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகளை ரூ.10 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது. இப்பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் 35 அடி கொண்ட பூண்டி ஏரி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி நீளம் கொண்டது. இந்த ஏரிகளில் 16 மதகுகள் மூலமாக அதிகபட்சமாக 1 லட்சத்துக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

இந்த ஏரிக்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணா பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த நேரத்தில் பூண்டி ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஏரியின் 2 மதகுகள் சேதமடைந்து நீர் கசிவு ஏற்பட்டது. அதே போன்று, பூண்டி நீரியல் மற்றும் நீர் நிலையியல் நிறுவனத்தின் கிணறுகளுக்கு செல்லும் சிறிய மதகு ஒன்று பழுதடைந்தது.

இதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் பூண்டி ஏரியில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகளின் திடத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், மதகுதிகளில் நீர் கசிவு ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்தனர். அந்த அறிக்கையின் பேரில், பூண்டி ஏரியில் 4 மதகுகளை மறுபுனரமைப்பு பணி மேற்கொள்ளளவும், நீர்த்தேக்கத்தின் மேற்புறத்தில் ஒரு அளவிடும் கிணறு கட்டுமான பணி அமைக்கவும் ரூ.10.05 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் மதகுகளை சீரமைக்கும் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. எனவே, அதற்கு முன்னதாக மதகுகள் சீரமைப்பு பணி முடிக்கப்படும், என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது, ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் 2 மதகுகள் சேதமடைந்து நீர் கசிவு ஏற்பட்டது.

Related Stories: