சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை கழுவேலி நிலம் என வகைப்படுத்திய வருவாய் துறை அதில் 8 ஏக்கர் அளவிற்கு தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து கடந்த 2014ம் ஆண்டு மே 16ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பக்கிங்காம் கால்வாயில் வரும் உபரி நீர் துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் கழுவேலி மற்றும் சதுப்பு நிலப் பகுதியாக உள்ளது.
இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய அரசே அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு, சென்னை மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
