×

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பூந்தமல்லி: சோஷியல் மீடியாக்கள் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகவும், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, கோவை, மயிலாடுதுறையை சேர்ந்த இகாமா சாதிக், முகமது ஆசிக், முகமது இர்பான், ஜெகபர் அலி, ரகமத் ஆகிய 5 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று முதன்முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரையும் 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கொடுக்குமாறு தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில்,  ஜூன் 18ம் தேதி (நேற்று) முதல் வரும் 23ம் தேதி காலை 10 மணி வரை விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை போலீசார் அழைத்து சென்றனர்.

Tags : Poonamallee , Poonamallee special court orders police to detain 5 arrested in terror recruitment case
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...