சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக புதிய அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தனியார் ரிசார்ட்டில் 50 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கம் அமைக்கும் பணியில், தனியார் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரும் ஜூலை 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்த உள்ளனர். மேலும், போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளின் வருகை, நிகழ்வுகள், புறப்பாடு விபரங்கள் பற்றிய கால அட்டவணை மற்றும் திட்டமிடல், செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி உணவக மாடியில் தனி அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், போட்டி நடைபெறும் தனியார் ரிசார்ட்டில் ஏற்கனவே உள்ள பழைய அரங்கத்தில் போட்டி நடைபெற உள்ளது. மேலும், அரங்கத்தில் போதுமான இடவசதி இல்லாததால், பழைய அரங்கத்திற்கு  அருகே 50 ஆயிரம் சதுர அடியில் புதிதாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கடந்த மாதம் தெரிவித்தார். இந்நிலையில், 50 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கம் அமைக்கும் பணியில், தனியார் ஊழியர்கள் நேற்று காலை முதல் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: