×

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் பராமரிப்பின்றி உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்: குற்ற சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றனர். இதனால், குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தபோது, குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக முக்கிய சாலைகள், தெருக்கள், சந்திப்புகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்தது மட்டுமல்லாமல், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீசாரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியாக வசித்து வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் இந்த சிசிடிவி கேமராக்ககள் உடைந்தும், வேலை செய்யாமலும் உள்ளன.

இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளதால், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், சாலை விபத்துகள் ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வாகனங்களையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. புதிதாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு உதவி செய்ய முன்வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை பராமரிப்பதற்கு உதவி செய்ய முன்வருவதில்லை என கூறப்படுகிறது. எனவே, தாம்பரம் மாநகர காவல் எல்லையில் உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அதனை எளிதில் கண்காணிக்கும் விதமாகவும் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரிடமும் போலீசார் கூட்டம் நடத்தி எடுத்துரைத்து, நிதி திரட்டி பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்தனர். பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைத்ததோடு, அதனை முறையாக பராமரிக்க போலீசார் தவறிவிட்டனர். இதனால் மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.

முன்பு எப்படி குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு அனைவரிடமும் கலந்து பேசி நிதி திரட்டி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதோ, அதேபோல மீண்டும் அனைவரிடமும் பேசி சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்கு தேவையான நிதியை போலீசார் பெற முயற்சிக்கலாம். அல்லது அரசிடமே அதற்கான நிதியை பெற முயற்சி எடுக்கலாம். ஆனால் அதுபோன்று எந்த முயற்சிகளிலும் போலீசார் ஈடுபடாமல் இருப்பது குற்றச் சம்பவங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது,’’ என்றனர். பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைத்ததோடு, அதனை முறையாக பராமரிக்க போலீசார் தவறிவிட்டனர். இதனால் மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

* சீரமைக்க அரசு முன்வர வேண்டும்
போலீசார் கூறுகையில், ‘புதிதாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு நிதி உதவி செய்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அதனை பராமரிப்பதற்கு உதவி செய்ய முன்வருவதில்லை. துறை அதிகாரிகளும் இதுதொடர்பாகன வழிமுறைகளை அறிவிக்கவில்லை. இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது குற்றவாளிகளை பிடிப்பதற்கும், சாலை விபத்து ஏற்படுத்தி தப்பி செல்பவர்களை கண்டறியவும் சிரமம் உள்ளது. எனவே, பழுதான சிசிடிவி கேமராக்களை பராமரிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அதேபோல் தமிழக அரசு உதவி செய்தால் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்,’’ என்றார்.

Tags : Thambaram City , Tambaram Municipal Police Breaks CCTV Cameras Without Maintenance: Problems in Preventing Crime
× RELATED ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த...