அரிசி, உணவு பொருட்களுக்கு நெருக்கடி விவசாயத்தில் குதித்த இலங்கை ராணுவம்: 1,500 ஏக்கரில் பயிரிடும் பணி தீவிரம்

கொழும்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடியை சமாளிக்க 1,500 ஏக்கரில் இலங்கை ராணுவம் விவசாய பணியை தொடங்கி உள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வரலாறு காணாத சரிவால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, நாடு பஞ்சத்தை நோக்கி செல்கிறது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்க கடைகளுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வேளை உணவு என்பதே அரிதாக மாறி உள்ளது.

ஒரு கோப்பை பால் ஆடம்பர பொருளாக மாறி உள்ளது. விவசாயத்துக்கு ரசாயன உரத்தை  பயன்படுத்த கடந்த ஏப்ரலில் திபர் கோத்தபய தடை விதித்ததால், அரிசி மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால், இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யவும் அன்னிய செலாவணி இல்லாததால் பசி, பட்டினியால் மக்கள் தவித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதத்தில் கடும் உணவு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், உணவு நெருக்கடியை சமாளிப்பதற்காக, கைவிடப்பட்ட 1,500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்கும் பணியில் இலங்கை ராணுவம் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக, விவசாய நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, நிலங்களை தேர்வு செய்து விதை வகைகளை பயிரிடுவதற்கு களையெடுத்தல், உழுதல் மற்றும் பாத்திகளை தயார் செய்தல் போன்றவற்றின் மூலம் தரையை தயார்படுத்தும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் அமைப்புகளும் விவசாய பணிகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளன. அடுத்த மாதம் முதல் முழு விவசாய பணிகளை தொடங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.  

* இலங்கைக்கு ஒருமித்த ஆதரவு

வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘இலங்கையில் கடினமான நேரத்தில் அண்டை நாட்டோடு நிற்பது அவசியம்,’ என்று கூறினார்.

* 50 ஆயிரம் டன் அரிசி

அரிசி விலையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், 50,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியக் கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

* அரசு அலுவலகங்கள், பள்ளிகளை மூட உத்தரவு

இலங்கையில் கடுமையான எரிபொருள் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பலமணி நேரம் முன்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் எரிபொருள் உதவியை இலங்கை பெற்று வருகிறது. கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வரும் திங்கள்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க இணையவழி வகுப்புகளை நடத்துமாறு இலங்கை கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: