×

பாதுகாப்புத் துறை, துணை ராணுவ பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு: போராட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு சலுகை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பாதுகாப்பு துறை மற்றும் துணை ராணுவ பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என ஒன்றிய அரசு சலுகை அறிவித்துள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவைக்கு வீரர்களை நியமிக்கும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சேரும் வீரர்கள், ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பல மாநிலங்களில் பரவி உள்ளது. பீகார், தெலங்கானா 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தீவிர போராட்டம் நடக்கிறது. நேற்று முன்தினம் மட்டும் 12 ரயில்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பல பஸ்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அக்னிபாதை திட்டத்திற்கான வயது உச்சவரம்பை 21ல் இருந்து 23 ஆக உயர்த்திய ஒன்றிய அரசு நேற்றும் சில புதிய சலுகைகளை அறிவித்தது. அதன்படி, ‘அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவப் படை (சிஏபிஎப்) மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னி வீரர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும், அக்னி வீரர்களின் முதல் பிரிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவிக்கப்பட்டது.

இதே போல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறையில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சரின் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘இந்திய கடலோர காவல்படை, பாதுகாப்பு பொதுப் பதவிகள், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும். இதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, நிதி அமைச்சகம் அக்னி வீரர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. இதில், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது, அவர்களது திறன் மேம்பாட்டிற்கும், உயர்கல்விக்கும் மற்றும் தொழில் தொடங்கவும் கடன் வசதி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய திறன் மேம்பாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆயுதப் படையின் பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து, ராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து செயல்படுகிறது.

அதன்படி, 4 ஆண்டு சேவையை முடிக்கும் அக்னி வீரர்களுக்கு திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் தொழில் தொடங்கும், வேலையில் சேரவும் பலதரப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்’ என கூறப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்து துறை வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளன. பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் வாக்குறுதி தந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில போலீஸ் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதே போல், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அரசு வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு சலுகை வழங்கப்படும் என கூறி உள்ளார்.

மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும், மாநில போலீஸ் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே, அக்னிபாதை திட்டம் குறித்து நேற்று பேட்டி அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘இத்திட்டம் குறித்து 2 ஆண்டாக ஆலோசனை நடத்தி, முன்னாள் ராணுவ வீரர்களின் கருத்தை பெற்று, முழு ஆய்வுக்குப் பின் கொண்டு வரப்பட்டது. இது ராணுவ ஆட்சேர்ப்பில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றனர். இளைஞர்கள் அனைவரும் ஒழுக்கத்துடனும், தாய்நாடு குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே அக்னிபாதை திட்டம்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, அக்னிபாதை எதிர்ப்பு போராட்டம் காரணமாக நேற்று நேற்று 369 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

பாஜ மாநிலங்கள்
மாநிலம்    முதல்வர்    சலுகை
உத்தரப் பிரதேசம்    யோகி ஆதித்யநாத்    போலீஸ் பணியில் முன்னுரிமை
அரியானா    மனோகர் லால் கட்டார்    அரசுப் பணியில் முன்னுரிமை
மத்திய பிரதேசம்    சிவ்ராஜ் சிங் சவுகான்    போலீஸ் பணியில் முன்னுரிமை
அசாம்    ஹிமந்த பிஸ்வா    போலீஸ் பணியில் முன்னுரிமை

என்னென்ன சலுகைகள்
அக்னி வீரர்களுக்காக ஒன்றிய அரசும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் அறிவித்துள்ள  சலுகைகள், வாக்குறுதிகள் வருமாறு:
ஒன்றிய அரசு
துறை    அமைச்சர்    சலுகை
ஒன்றிய உள்துறை    அமித்ஷா     துணை ராணுவ பணியில் 10% இடஒதுக்கீடு
பாதுகாப்பு துறை    ராஜ்நாத் சிங்    ராணுவ பணிகளில் 10% இடஒதுக்கீடு
நிதி அமைச்சகம்    நிர்மலா சீதாராமன்    தொழில் தொடங்க, உயர்கல்விக்கு கடன் வசதி
விமான போக்குவரத்து    ஜோதிராதித்யா சிந்தியா     வேலைவாய்ப்பில் முன்னுரிமை
திறன் இந்தியா    தர்மேந்திர பிரதான்    திறன் இந்தியா சான்றிதழ் மூலம் தொழில் தொடங்க, பணியில் சேர பல்வேறு வாய்ப்புகள்

கிடைப்பவை
* அக்னி பாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும்.
* 4 ஆண்டுக்குப் பின் 75 சதவீதம் பேர் விடுவிக்கப்படுவார்கள். திறன் அடிப்படையில் 25 சதவீதம் பேர் மட்டும் நிரந்தர ராணுவ பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
* 4 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்படும் அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
* இப்பணியில் ரூ.30 ஆயிரம் முதல் 40 வரை சம்பளம் வழங்கப்படும்.
* ஓய்வு பெறும் நாளில் ரூ.11.72 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இத்தொகைக்கு வரி கிடையாது.
* இப்பிரிவில் சேர குறைந்தபட்ச வயது 17.5 மற்றும் அதிகபட்ச வயது 23.

* பலியான வாலிபருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற வாலிபர் பலியானார். அவருடைய குடும்பத்துக்கு இம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

* தொடரும் போராட்டம் பீகாரில் ரயில்வேக்கு ரூ.200 கோடி இழப்பு
பல மாநிலங்களில் நேற்றும் அக்னிபாதை எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. பீகாரில் 4வது நாளாக போராட்டம் நீடித்தது. அங்கு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாட்னாவின் தரேகானா ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கிருந்த போலீஸ் வாகனமும் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது. தனபூரில் சாலையில் வந்த ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அதிலிருந்த நோயாளியையும், அவர்களது உறவினர்களையும் தாக்கியதாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறி உள்ளார். அரியானாவில் லூதியானா ரயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நாசப்படுத்தினர். ராஜஸ்தானில் ஜெய்பூர், ஜோத்பூர், ஜூன்ஜூனு போன்ற பகுதிகளிலும், ஜெய்பூர்-டெல்லி நெடுஞ்சாலையிலும் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேற்றும் பல இடங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பீகாரில் மட்டுமே இதுவரை போராட்டம் காரணமாக ரயில்வேக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொது நல ரிட் மனுவில், ‘அக்னிபாதை திட்டம் சரியான கோணத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளதா?, இதனால் தேசப் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் நாடு முழுவதும் இதனால் ஏற்பட்டு வரும் வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலன் விசாரணை குழு (எஸ்.ஐ.டி) அமைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வன்முறைகள் வேண்டாம் அமைதியாக போராடுங்கள்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாதை ஆட்சேர்ப்பு திட்டம் முழுக்க முழுக்க இலக்கு அற்றது. இதில் உங்கள் குரலையும் அரசு புறக்கணிக்கிறது. இளைஞர்களைப் போல பல முன்னாள் ராணுவ வீரர்களும், ராணுவ நிபுணர்களும் இத்திட்டத்தை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். உண்மையான தேசப்பற்றுள்ளவர்களைப் போலவே நாங்களும் உங்கள் கோரிக்கைகளை உண்மையான, வன்முறையற்ற, அமைதியான வழியில் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். நீங்களும் உங்கள் கோரிக்கைக்கான போராட்டத்தை அமைதியான முறையில், வன்முறையின்றி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை, உங்களுடன் காங்கிரஸ் முழுமையாக துணை நிற்கும்’’ என்றார்.

* மாணவர்கள் ‘தண்டால்’
கேரளாவில் திருவனந்தபுரத்திலும், மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கனாஸ்  பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ரயில்களை மறித்து,  ‘தண்டால்’ உடற்பயிற்சி செய்து எதிர்ப்பைக் காட்டினர்.

* திரும்பப் பெறுவார் மோடி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெறுவார் என முன்கூட்டியே நான் கூறியிருந்தேன். அதே போல, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போலவே இளைஞர்களின் கோரிக்கையும் ஏற்கப்பட்டு, அக்னிபாதை திட்டமும் நிச்சயம் வாபஸ் பெறப்படும்’ என்றார்.

* காங். இன்று சத்தியாகிரகம்
அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இப்போராட்டத்தில் காங். எம்பிக்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள், அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : Agni ,Union government , 10% reservation for Agni soldiers in defense and paramilitary services: US concession to stop protests
× RELATED அக்னி நட்சத்திர காலம் துவங்கும்...