பெங்களூருவில் இன்று கடைசி டி20 ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

பெங்களூர்: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டி20 தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான கடைசி போட்டி, பெங்களூருவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்க அணி டெல்லி மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

ஆனால், விசாகப்பட்டணம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த அடுத்த 2 போட்டியிலும் ஒருங்கிணைந்து விளையாடிய இந்தியா வெற்றியை வசப்படுத்தி பதிலடி கொடுக்க 2-2 என சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. ராஜ்கோட் போட்டியில் ஹர்திக், கார்த்திக் ஜோடியின் அதிரடி ஆட்டம் ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவியது. ஆவேஷ் கான், சாஹல், ஹர்ஷல், அக்சர் மற்றும் புவனேஷ்வர் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்ததால், தென் ஆப்ரிக்கா 87 ரன்னில் சுருண்டது. அடுத்தடுத்த வெற்றிகளால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனாலும் தென் ஆப்ரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றக்கூடிய மில்லர், டுசன், கேப்டன் பவுமா, டிகாக் , கிளாஸன், பிரிட்டோரியஸ், ரபாடா, அன்ரிச் என திறமையான வீரர்கள் இருப்பது அந்த அணியின் பலம். காயம் காரணமாக போன ஆட்டத்தில் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறிய கேப்டன் பவுமா, இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: