ரஞ்சி கோப்பை மத்தியபிரதேசம் பைனலுக்கு முன்னேற்றம்

ஆலூர்: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் வெற்றி வாகை சூடிய மத்திய பிரதேசம், மும்பை அணிகள் பைனலுக்கு முன்னேறியுள்ளன. ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஆலூர், பெங்களூருவில் ஜூன் 14ம் தேதி தொடங்கின. ஆலூரில் நடந்த முதல் அரையிறுதியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ம.பி. 341 ரன், பெங்கால் 273 ரன் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்சில் மபி 281 ரன் சேர்த்தது. 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால், 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது.

அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும், அரைசதம் விளாசியிருந்த கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் மட்டும் உறுதியுடன் போராடினார். அவரும் 78 ரன்னில் வெளியேற, சிறிது நேரத்தில் பெங்கால் 175 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ம.பி. 174 ரன் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது. பெங்கால் அணியின் ஷாபாஸ் அகமது 22* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ம.பி. தரப்பில் குமார் கார்த்திகேயா 5, கவுரவ் 3, சரன்ஷ் 2 விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்சில் 165 ரன் குவித்த ஹிமான்ஷு மந்த்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

* மும்பை தகுதி

பெங்களூருவில் நடந்த 2வது அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேசம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 100, ஹர்திக் 115 ரன் விளாச மும்பை 393 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய  உ.பி. முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா 64,  ஜெய்ஸ்வால் 181, அர்மான் 127 ரன் குவிக்க 4வது நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 449 ரன் குவித்திருந்தது. இந்நிலையில் மழை காரணமாக நேற்று 5வது நாள் ஆட்டம் மதியம் வரை தொடங்கவில்லை.  பிறகு தொடர்ந்த ஆட்டத்தில், மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 533 ரன் (156 ஓவர்) எடுத்திருந்தபோது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சர்பராஸ்கான் 59*, ஷாம்ஸ் முலானி 51* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை 746 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், போதுமான நேரம் இல்லாததால் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை பைனலுக்கு முன்னேறியது.

* இறுதி ஆட்டம்

மத்திய பிரதேசம் - மும்பை மோதும் பைனல் ஜூன் 22ம் தேதி பெங்களூரு எம்.சின்னசாமி அரங்கில் தொடங்குகிறது. மும்பை அணி 47வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளதுடன், அவற்றில் 41 முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 12வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ள மத்திய பிரதேசம், 4 முறை கோப்பையை வசப்படுத்தியுள்ளது.

Related Stories: