எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக் அப்துல்லாவும் போட்டியிட மறுப்பு

ஸ்ரீநகர்: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் ஏற்கனவே மறுத்து விட்ட நிலையில், தற்போது பரூக் அப்துல்லாவும் மறுத்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் கடந்த 15ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டினார். அதில் திமுக உட்பட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

இதில், பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் எம்பி.யுமான பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்களை மம்தா பரிந்துரைத்தார். ஆனால், சரத் பவார் பொது வேட்பாளராக போட்டியிட விருப்பமில்லை என விலகிக் கொண்டார். இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மீண்டும் 17 எதிர்க்கட்சிகளும் வரும் 21ம் தேதி டெல்லியில் கூடி பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளன. இதில், 84 வயதாகும் பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்ட அதிக வாய்ப்பிருப்பதாக நம்பப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாது என பரூக் அப்துல்லாவும் விலகிக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அப்துல்லா நேற்று விடுத்த அறிக்கையில், ‘ஜனாதிபதி வேட்பாளராக எனது பெயரை முன்மொழிந்து என்னை கவுரவப்படுத்தியதற்காக எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல எதிர்க்கட்சித் தலைவர்களும் தொலைபேசி மூலமாக எனக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து வருகிறது.

இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் வழிநடத்திச் செல்ல எனது உதவி தேவைப்படுகிறது. நான் இன்னும் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு, ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டுமென நம்புகிறேன். எனவே, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் இருந்து வாபஸ் பெறுகிறேன். எதிர்க்கட்சிகள் தேர்வு செய்யும் பொது வேட்பாளருக்கு ஆதரிப்பேன்’ என கூறி உள்ளார். இதன் காரணமாக, வரும் 21ம் தேதி நடக்கும் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: