×

திருப்பத்தூரில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை இரவில் குடியிருப்புகளுக்குள் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்தது: பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலம் மீட்பு

திருப்பத்தூர்: தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தர்மபுரி- கிருஷ்ணகிரி ரயில்வே மேம்பாலம் அருகே சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி-1, பகுதி-2 மற்றும் வேலன் நகர், தாயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவு உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கார், இருசக்கர வாகனங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் திருப்பத்தூரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தகவலறிந்த வருவாய் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று அதிகாலை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மழைவெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பைபர் படகுகள் மூலம் மீட்டனர். அதேபோல் கைக்குழந்தைகளுடன் பெற்றோர், மூதாட்டி, பெண்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். தொடர்ந்து, குடியிருப்புகளில் புகுந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நாட்றம்பள்ளி, கேதாண்டப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. ஜலகாம்பாறை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 67.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

* வால்பாறையில் மண் சரிவு: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 4 பேர் வீடுகளின் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

* மின்னல் தாக்கி ஒருவர் பலி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பரளை கிராமத்தை சேர்ந்த பூலார் மகன் மாரிகண்ணன். இவர் நேற்று வயல்வெளிகளில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் உடல் கருகி பலியானார். மேலும், அதே கிராமத்தில் ஆடு மேய்த்த சகுந்தலா, ஆறுமுகம், கருப்பையா ஆகியோரும் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.

Tags : Vidya ,Tirupati , Vidya, Vidya torrential downpour floods in Tirupati
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...