×

அதிமுக தலைமை அலுவலகத்தில் ரகளை எடப்பாடி ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்: ரவுடிகள் தாக்கியதாக புகார்; 11 மாவட்ட செயலாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுத்த வந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் திடீரென அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, எடப்பாடி ஆதரவாளர் மீது ஓபிஎஸ் அணியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இபிஎஸ் தரப்பினர் வைத்த ஒற்றை தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பினர்  நிராகரித்தனர். இந்நிலையில் எடப்பாடியின் புதிய சமரச திட்டத்தால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உடனடியாக சென்னை வரும்படி அழைப்பு விடுத்தார்.

அதன்படி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 10.30 மணிக்கு அவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஓபிஎஸ் அழைப்பை ஏற்று 11 மாவட்ட அதிமுக செயலாளர்கள் நேற்று சென்னை வந்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஓபிஎஸ்சை சந்தித்த அதிமுக கட்சி நிர்வாகிகள், ‘நீங்கள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளீர்கள். அப்படி என்றால் கட்சியின் தலைவர் நீங்கள்தான். அப்படி இருக்கும்போது ஏன் நாம் தனியாக ஓட்டலில் ஆலோசனை நடத்த வேண்டும். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கேயே ஆலோசனை நடத்தலாம்’’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்தே ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை அதிமுக கட்சி அலுவலகம் வரும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்கள் அணிவகுப்புடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு காலை 11 மணிக்கு வந்தார். அப்போது வழக்கத்தைவிட பல ஆயிரம் அதிமுக தொண்டர்கள் குவிந்து கட்சி தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ்சுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஓபிஎஸ்சை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன், சுப்புரத்தினம், பாலகங்கா மற்றும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக 11 மாவட்ட செயலாளர்களும் வந்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மான குழுவில் இடம்பெற்றிருந்த ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், செம்மலை, வைகைச்செல்வன், வளர்மதி உள்ளிட்டவர்களும் வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒற்றை தலைமை கோஷத்தை பற்றி தொடர்ந்து பேசி வரும் ஜெயக்குமார் காலை 11.35 மணிக்கு அதிமுக கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அப்போது, அங்கு கூடி இருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பி, அவரை முற்றுகையிட முயன்றனர். ஆனாலும், அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை பாதுகாப்பாக கட்சி அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். கட்சி அலுவலகத்திற்குள் ஜெயக்குமாரை விட்டுவிட்டு வெளியே வந்த எடப்பாடி ஆதரவாளர் ஒருவரை அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு தர்மஅடி கொடுத்தனர்.

அவரது வாயிலும், மூக்கிலும் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட வெளியே வந்த, அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஜெயக்குமாரை கட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்திற்குள் விட்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது, ‘நீ எடப்பாடி ஆதரவாளரா?’ என் கேட்டு அடித்தனர். அதிமுக கட்சி அலுவலகத்தில் ஏராளமான ரவுடிகள் உள்ளனர்’ என்றார். பின்னர் அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் மாரிமுத்து, சென்னை பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் என்பது தெரியவந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பின்னர், பொதுக்குழு தீர்மான குழுவினர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த முதல் மாடிக்கு சென்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், எடப்பாடி ஆதரவாளர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டவர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மான புத்தகத்தை வாங்கி பார்த்து, அதற்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்தார். அதிமுக பொதுக்குழு நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் தீர்மான குழுவினர் நடத்திய ஆலோசனை கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிராகரிக்கப்படுமா,இரட்டை தலைமையே நீடிக்குமா என்பது குறித்து முடிவு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

* யார், யார் ஆதரவு...?
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 மாவட்ட செயலாளர்கள் நோில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று தேனி மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் சாத்தூர் ரவிச்சந்திரன் (விருதுநகர்), வேளச்சேரி அசோக் (சென்னை தெற்கு கிழக்கு மாட்டம்), அசோகன் (கன்னியாகுமரி மாவட்டம்), அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு), சிறுணியம் பலராமன் (திருவள்ளூர் வடக்கு), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி மாநகர்), வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு), சுப்பிரமணி (தஞ்சாவூர் வடக்கு), ராமச்சந்திரன் (பெரம்பலூர்), தாமரை ராஜேந்திரன் (அரியலூர்) ஆகிய 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சில மாவட்ட செயலாளர்கள் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Varamari ,Rawla Edapadi ,Roudis ,OPS , AIADMK chief fired at supporter of rioters OPS consultation at party office with 11 district secretaries
× RELATED சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது...