×

அக்னி பாதை ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து சென்னையிலும் இளைஞர்கள் போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை

சென்னை: ‘அக்னி பாதை’ ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், சென்னையிலும், நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த 3 நாட்களாக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும், 12க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 விரைவு ரயில்கள் மற்றும் 140 பயணிகள் ரயில்கள் உள்பட 340 ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, போராட்டம் நீடித்து வரும் வழியாக செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த இளைஞர்கள், போர் நினைவு சின்னம் பகுதியில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்ததும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர்  அன்பு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளைஞர்களை கைது செய்தனர்.

போராட்டம் குறித்து இளைஞர்கள் கூறியதாவது:  நாங்கள் நாட்டுக்காக உழைக்க தயார் என்று காத்திருக்கும் வேளையில், எங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதித் தேர்வு ஆகியவை முடித்து எழுத்துத் தேர்வுக்காக காத்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட அக்னி பாதை திட்டத்தால் தங்களுக்காக தேர்வுகள் நடத்தப்படாமலே போக வாய்ப்புண்டு. நாடு முழுக்க சிஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்று காரணம் சொன்னார்கள்.

ஆனால், தேர்தல்கள், அரசியல் கூட்டங்கள், பள்ளி கல்லூரித் தேர்வுகள் எல்லாம் நடத்தபட்டபோது எங்களுக்கான தேர்வை மட்டும் நடத்த முடியவில்லையா?.  எங்களுக்காக செவி சாய்க்க யாருமே இல்லை என்ற எண்ணம் வந்ததால், மாநில தலைநகரிலிருந்து எங்கள் குரலை ஒலிக்க வந்துள்ளோம். தற்போது தமிழ்நாடு முழுக்க இருந்து எங்களைப் போன்ற ஏராளமானவர்கள் இணைந்துகொண்டே உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. சிஇஇ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட எங்களது இரண்டு கோரிக்கைகள் நடைபெறும் வரை தொடர்ந்து போராடுவது என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ரயில் நிலையங்களில் பாதுகாப்பு
அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடும் நிலையில் சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே 100க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரயில் நிலையத்துக்கு சென்று போராட வாய்ப்பு இருப்பதால் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சுழற்சி முறையில் 2 போலீசார்கள் மோப்ப நாயுடன்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Agni Route ,Union Govt , Youths protest in Chennai against Agni Path Army recruitment scheme: Warning to the Union Government
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...