குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு... ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு தேவை என விளக்கம்!!

டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநில முதல்வர்கள் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். இதன்படி, மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் 17 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ணா காந்தி அல்லது காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நிறுத்த பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பேசிய  ஃபரூக் அப்துல்லா, குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறினார். ஜம்மு- காஷ்மீர் எதிர்காலம் நிச்சயமற்ற சூழலில் இருப்பதால் அம்மாநிலத்தில் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்  அவர் கூறியதாவது, ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக என்னை முன்மொழிந்த மம்தா பானர்ஜிக்கும், எனக்கு அழைத்து ஆதரவு கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார். முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் விரும்பின. இதுதொடர்பாக மம்தா மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் சரத் பவாரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் மாநில அரசியலில் தீவிரமாக செயல்படவே விரும்புவதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்றும் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Related Stories: