×

கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வனத்துறை தடை மீறி குளிக்க குவியும் பொதுமக்கள்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் விதித்த தடையை மீறி, அங்கு குளிப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். திருப்பத்தூர் ஒன்றியம், பெருமாப்பட்டு ஊராட்சியில், ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் சுற்றுலா தலமான ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளது.

 இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சுவாமியை வழிபடுவதுடன், அருகில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டுகிறது. ஜலகாம்பாறையில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அதனை  நம்பியுள்ள விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில்  உள்ளனர்.

இந்த தண்ணீரானது ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறுக்கு செல்வதால் அருகே உள்ள கிராமங்களான பெருமாபட்டு, தாதவல்லி, செலந்தபள்ளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், பாதுகாப்பு கருதி அங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆனாலும், சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் அங்கு குவிந்து வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குளித்து வருகின்றனர். ஏற்கனவே, ஜலகாம்பாறை வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் கொட்டும்போது அங்கு குளிக்க சென்ற 2 பேர் பாறையில் இருந்து வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். ஆனாலும், வனத்துறை விதித்த தடையை மீறி தற்போது பொதுமக்கள் குவிந்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Jalakamparai , Jalakamparai Falls, Forest Department, Tourist
× RELATED திருப்பத்தூர் பகுதியில் பலத்த...