×

அக்னிபாத் வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை வேலைகளில் 10% ஒதுக்கீடு.. விமானப் போக்குவரத்துத் துறையிலும் முன்னுரிமை : ஒன்றிய அரசு அதிரடி

டெல்லி : பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னிபாத்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு அக்னி வீரர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் சிவிலியன் பதவிகளும் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும். இது தவிரப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அமலில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இந்த புதிய ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதே போல், விமான போக்குவரத்துத்துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.



Tags : Defense Department ,Government Action , Agnipath, Department of Defense, Air Transport, Priority
× RELATED 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 5...