×

காமலாபுரம் விமான நிலையத்தில் தமிழகத்தின் முதல் விமான பயிற்சி பள்ளி தொடக்கம்

*25 ஆண்டுகள் நடத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்


சேலம் : தமிழகத்தின் முதல் விமான பயிற்சி பள்ளி, சேலம் விமான நிலையத்தில் தொடங்கப்படுகிறது. 25 ஆண்டுகள் நடத்த தனியார் நிறுவனத்துடன் விமான போக்குவரத்துத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் 1990ம் ஆண்டு காலகட்டத்தில், இரண்டாம் நிலை நகரங்களில் விமானநிலையங்களை ஒன்றிய அரசு அமைத்தது. இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில், கடந்த 1993ம் ஆண்டு 165 ஏக்கர் பரப்பளவில் விமானநிலையம் கட்டப்பட்டது.

இந்த விமான நிலையத்தில் இருந்து, ஆரம்பத்தில் விமானங்கள் இயக்கப்படவில்லை. சில ஆண்டுகளில் என்இபிசி நிறுவனம், சேலம்-சென்னை இடையே விமான சேவையை தொடங்கியது. அப்போது பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால், அந்நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. 2006ம் ஆண்டுக்கு பிறகு கிங்பிஷர், ட்ரூஜெட் நிறுவனங்கள் சேலம்-சென்னை இடையே விமானங்களை இயக்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டநிலையில், மீண்டும் அதன் சேவை தொடங்கவில்லை.

இதனால் தற்போது எந்த நகரத்திற்கும் விமானம் இயக்கப்படாமல், சேலம் விமானநிலையம் காலியாக இருக்கிறது. தனியார் விமானங்கள் மட்டும் வந்து செல்கின்றன. இச்சூழலில் சேலம் விமானநிலையத்தை விரிவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடுபாதையை சீரமைத்து, பல்வேறு வசதிகளை செய்யும் பணியும் விமான போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் 6 இடங்களில் உள்ள விமான நிலையங்களில், தனியார் நிறுவனங்கள் மூலம் விமான பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் என ஒன்றிய அரசு அரறிவித்தது. இதில், தமிழகத்தில் சேலம் விமான நிலையத்தில் விமான பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை இந்திய விமான போக்குவரத்துத்துறை சமீபத்தில் கோரியது. இதன்படி, தற்போது எக்வி ஏர் தனியார் நிறுவனத்துடன் சேலத்தில் விமான பயிற்சி பள்ளி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சேலம் விமானநிலையத்தில் 25 ஆண்டுகள் விமான பயிற்சி பள்ளியை நடத்திக் கொள்ள எக்வி ஏர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளனர். சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா மற்றும் எக்வி ஏர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேப்டன் சச்சின்பானே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிறுவனம் இன்னும் ஒரு மாதத்தில் தங்களது பயிற்சி பள்ளியை விமானநிலையத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இங்கு கமர்சியல் பைலட் பயிற்சியை அளிக்கவுள்ளனர். இப்பயிற்சியில் சேர பிளஸ்-2 கல்வி தகுதி போதுமானது. பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வு, கட்டண விவரம் போன்றவற்றை எக்வி ஏர் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.

இதனால், சேலம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளில் இருந்து விமான பைலட் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், இங்கு சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் கமர்ஷியல் விமான பயிற்சி பள்ளியாக சேலம் விமான நிலைய பயிற்சி பள்ளி அமைகிறது.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தென்னிந்தியாவில் விமான பயிற்சி பள்ளியை தொடங்க சரியான இடமாக, சேலத்தை விமான போக்குவரத்துத்துறை தேர்வு செய்திருந்தது. காரணம், இங்கு பைலட் பயிற்சி அளிக்க சரியான சீதோஷ்ண நிலை மற்றும் உள்கட்டமைப்புகள் இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, எக்வி ஏர் நிறுவனத்துடன் பைலட் பயிற்சி பள்ளியை, 25 ஆண்டுகள் நடத்திக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துத்துறைக்கு கட்டணத்தை அந்நிறுவனம் செலுத்தும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு பயிற்சி பெறலாம். ஒரு பேட்ஜ்க்கு 30 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 2 அல்லது 3 பேட்ஜ் மாணவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்கள்,’’ என்றனர்.


Tags : Tamil ,Nadu ,Kamalapuram Airport , Salem, Flight Flying School,Tamil Nadu's first flight training school started
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...