×

அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.200 கோடி இழப்பு! : பகீர் தகவல்

டெல்லி : அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் ரூ.200 கோடி அளவுக்கு இந்திய ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபாதை’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். அதனால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ரயில் நிலையங்களுக்கும், ரயிலுக்கும் தீவைக்கப்பட்டது. பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் அங்கு நின்றிருந்த 3 பயணிகள் ரயில்களுக்கு தீவைத்தனர்.

இந்த நிலையில், இந்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் ‘அக்னிபாதை’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் 12 ரயில்கள் தீக்கரையாகின. இதுவரை 340க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; 234 ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் போராட்டத்தின் காரணம் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து  தானாபுரம் ரயில்வே பிரிவு டிஆர்எம் பிரபாத் குமார் கூறுகையில், ‛‛ ரயில் நிலையங்களில் ஏற்பட்ட போராட்டம், வன்முறையில் மொத்தம் 50 பெட்டிகள், 5 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன. மேலும் கணினிகள் சேதப்படுத்தப்பட்டு தொழில்சார் கருவிகள் சிதிலமடைந்துள்ளன. உள்கட்டமைப்புகளும் சீர்க்குலைந்துள்ளதோடு ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.



Tags : Indian Railways ,Agnipathai , Agnipathai, Indian Railways, loss
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்