முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி- மருதவனம் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி- மருதவனம் இடையே உள்ள ஒரு கிலோ மீட்டர் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்திலிருந்து மருதவனம் வரையிலான சுமார் ஒருகிலோ மீட்டர் தூரமுள்ள சாலையானது இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இவ்வழியாக தான் எடையூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டும்.

 குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல இவ்வழியாகதான் வந்து சங்கேந்தி கடைதெருவுக்கு வரவேண்டும். இப்படி முக்கியத்துவமும், அவசியமும் வாய்ந்த இந்த சாலை தற்பொழுது தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக பல்லாங்குழி போன்று காட்சியளிகிறது.

இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து மக்களும் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த பல்லாங்குழி சாலையால் அடிக்கடி சிறு விபத்துக்களும் நடந்து வருகின்றன.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நீண்டகால இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் கடந்த ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுக்கொள்ள வில்லை. அதனால் தற்போதை அரசும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு உடன் போர்கால அடிப்டையில் இந்த சாலையை சீரமைக்கக வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: