இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் தான் அக்னிபாத் : நாடே பற்றி எரியும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

தூத்துக்குடி : பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என.ரவி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் பெயரில் விருதுகளை வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர், அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் தான் அக்னிபாத். அக்னிபாத் திட்டத்தில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்கப்படுகிறது. சிறப்பான திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைக்கின்றனர்.  21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும். திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்,என்றார்.

Related Stories: