உடுமலை : தென்மேற்கு பருவமழை தாமதம் அடைந்துள்ளதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் துவங்காததால் அணைக்கு குறைந்தளவே நீர்வரத்து உள்ளது.அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதேநாளில் நீர்மட்டம் 77.30 அடியாக இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் அணை நிரம்பி வழிந்தது. எனவே, தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.சாலையின் நடுவில் தோண்டிய பள்ளத்தால் தொடரும் விபத்து உடுமலை : உடுமலை 7-வது வார்டு காந்திநகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் பின்புறம் உள்ள சாலையில், குடிநீர் கேட் வால்வு உள்ளது. இதனால் குழி தோண்டப்பட்டு அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. நடுரோட்டில் பள்ளம் உள்ளதால், வாகனத்தில் செல்வோர் இரவு நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். இதன் அருகே தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் குழியில் தவறி விழ வாய்ப்புள்ளது.எனவே, கேட்வால்வை இடம் மாற்றி உடனடியாக குழியை மூட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், குடிநீர்தொட்டி அமைந்துள்ள பகுதியின் சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுகிறது. அப்பகுதி புதர் மண்டியுள்ளது. இதனால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சுற்றுச்சுவரையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.