×

பேட்டிங்கில் எனது முன்னேற்றத்திற்கு டிராவிட் தான் காரணம்; ஆட்டநாயகன் தினேஷ்கார்த்திக் பேட்டி

ராஜ்கோட்: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 4வது டி.20 போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ்கார்த்திக் 27 பந்தில், 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 55, ஹர்திக்பாண்டியா 46 (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான்கிஷன் 27 ரன் அடித்தனர். தென்ஆப்ரிக்க பவுலிங்கில் லுங்கி நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.5 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்ரிக்க அணியில், டுசென் 20, டிகாக் 14, மார்கோ ஜான்சன் 12 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்ற இலக்க ரன்னில் அவுட் ஆகினர். கேப்டன் பவுமா 8 ரன்னில் இருந்தபோது இடது கையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

இந்திய பந்துவீச்சில் ஆவேஷ்கான் 4 ஓவரில் 18 ரன் கொடுத்து 4, சாஹல் 2 விக்கெட் எடுத்தனர். தினேஷ்கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-2 என தொடர் சமனில் இருக்க கடைசி போட்டி நாளை பெங்களூருவில் நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில்,, ‘‘மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என போட்டி துவங்குவதற்கு முன்பு பேசியிருந்தோம். அதன்படியே சிறப்பாக செயல்பட்டு, மெகா வெற்றியைப் பெற்றுள்ளோம். அடுத்த போட்டியிலாவது வலது கையில் டாஸை போட்டு, டாஸை ஜெயிக்க முயற்சி செய்வேன். நான்கு போட்டிகளிலும் டாஸை இழந்தது வருத்தம்தான். ஹர்திக் விளையாடிய விதம், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. தினேஷ் கார்த்திக் மிரட்டலாக விளையாடினார். அவர் அடிக்க அடிக்க எங்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகமாக துவங்கியது.

தனிப்பட்ட முறையில், நான் இன்னும் சில ஷாட்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். கடைசிப் போட்டியில் 100 சதவீத உழைப்பையும் கொடுக்க காத்திருக்கிறோம்’’, என்றார். ஆட்டநாயகன் தினேஷ்கார்த்திக் கூறுகையில், “மகிழ்ச்சியாக உள்ளேன். கடந்த போட்டியில் நான் வைத்திருந்த திட்டங்கள்படி எதுவும் நடக்கவில்லை, ஆனால் இந்த போட்டியில் எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதற்கு அதிகமான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

பேட்டிங்கிற்கு இந்த ஆடுகளம் சவாலாக இருந்தது, பவுண்டரி அடிப்பதே சிரமமாக இருந்தது. பேட்டிங்கில் எனது முன்னேற்றத்திற்கு பயிற்சியாளர் டிராவிட் தான் முக்கிய காரணம். கடைசி போட்டி நடக்கும் பெங்களூர் மைதானம் எனக்கு அதிக பரிட்சயமானது. அங்கு நான் அதிகமான போட்டியில் விளையாடியுள்ளேன். 5 போட்டி கொண்ட தொடர் கடைசி போட்டி வரை செல்வது நல்ல விஷயம் தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அணிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல கடுமையாக முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.

Tags : Dravid ,Dinesh Karthik , Dravid is the reason for my progress in batting; Interview with Dinesh Karthik
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...